ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!
ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஜாபர் சாதிக்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மங்கை திரைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கடத்தலில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி "மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது.
இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம். போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வை களங்கப்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது.
எந்த தொடர்பும் இல்லை
அதற்கு அ.தி.மு.க. துணைபோகிறது. தி.மு.க.வின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தி.மு.க.வினர் தவறு செய்வது தெரியவந்தால் உடனடியாக கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கிறது.
தி.மு.க. என்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாது. சட்டவிரோத நடவடிக்கையில் துணை போவோரை கட்சியில் வைத்திருக்கமாட்டோம். போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடன் ஜாபர் சாதிக்கை தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டோம்.
ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை களங்கப்படுத்தும் நோக்கோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. பா.ஜ.க.வின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது" என்றார்.