கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு சிக்கல்? - அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மே 17 ஆம் தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்வைத்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தது போல, அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி கோட்டாபயவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்திருந்தது.
இதனிடையே நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்குமாறு கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மே 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு ஒப்புதல் பெற்று விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் இதை அதிபரின் ஒப்புதலுக்கு அளிப்பார். அதனைத் தொடர்ந்து அதிபர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும். அதன்பின்னர் வாக்கெடுப்பு நடக்கும்.
நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுப்பில் 3ல் இரண்டு பங்கு எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இதையடுத்து நாடாளுமன்றம் அதிபரை நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நீதிமன்றத்துக்கு அனுப்பும். அதில் நீதிமன்றம் முடிவெடுத்து ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் மீண்டும் அதே நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வந்து மீண்டும் 3ல் இரண்டு பங்கு எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து தான் அங்கு அதிபரை நீக்க முடியும் என்பதால் கோட்டாபய பதவிக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது.