இந்திய ரூபாய் நோட்டுக்களில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி திட்டவட்டம்
ரூபாய் நோட்டுக்களில் தாகூர், அப்துல் கலாம் புகைப்படம் இடம்பெறுவதாக வெளியான செய்திக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டில் வாட்டர்மார்க்
இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் மட்டுமே இருப்பது வழக்கம். ஆனால் ரூபாய் நோட்டில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படமும் இருக்கும்,
மேலும் ரூபாய் நோட்டில் வாட்டர்மார்க் எனப்படும் மறைவாக தெரியும் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ரிசர்வ் வங்கி மறுப்பு
ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வெளியீட்டு அமைப்பும் இணைந்து டெல்லி ஐஐடி பேராசிரியர் திலிப் டி. சஹானிக்கு
மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரது தலா இரண்டு வாட்டர் மார்க் படங்களை அனுப்பியதாக தெரிகிறது. இவர் தான் வாட்டர் மார்க் படங்களை சிறப்பாக தேர்வு செய்து இறுதி ஒப்புதலுக்காக அரசுக்கு பரிசீலனை செய்பவர்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்தே ரவீந்திரநாத் தாகூர் , அப்துல் கலாமின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறுவது குறித்து செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது இந்திய ரூபாயில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது எனவும், மேலும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை மாற்றும் எந்த திட்டமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்திருக்கிறது.