சி.ஏ.ஏ மோடி கொண்டுவந்தது - திரும்ப பெறுவது எளிதல்ல - அமித் ஷா திட்டவட்டம்
சி.ஏ.ஏ சட்டத்தை எக்காரணத்திற்கும் திரும்ப பெற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமித் ஷா திட்டவட்டம்
தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் போது, தேசத்தில் குடியுரிமையை உறுதி செய்வது இறையான்மை சார்ந்த உரிமை என்று குறிப்பிட்டு, அதில் எந்த சமரசமும் செய்யப்படாது என உறுதிபட தெரிவித்தார்.
சிஏஏ-வை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த அவர், சிஏஏ யாருடைய குடியுரிமையும் பறிக்காது என்றும் விளக்கமளித்தார். 2019-லேயே குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளோம் என்ற அமித் ஷா,
கொரோனா பரவலால் சட்டத்தை அமலாக்குவதில் தடைபட்டது என்று சுட்டிக்காட்டினார்.
திரும்பப் பெறுவது எளிதல்ல
இதில் அரசியல் ஆதாயம், நட்டம் என்ற பேச்சுக்கு எல்லாம் இடமில்லை என்று கூறி, இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ'வை திரும்பப் பெறுவோம் என்று கூறும் நிலையில், முதலில் தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற அவர்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா? என்று வினவினார்.
சிஏஏவை நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ளது, அதனைத் திரும்பப் பெறுவது எளிதல்ல என்ற அமித் ஷா, சிஏஏவை ரத்து செய்ய விரும்புவோர் ஆட்சிக்கே வர இயலாது என்றார்.
மோடியின் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும், சி.ஏ.ஏ'வையும் தேர்தலை சந்திக்கும் முன் நிறைவேற்றியுள்ளோம்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.