என்எல்சி விவகாரம்; அவசரமாக விவாதிக்க வேண்டும் - மக்களவையில் அதிமுக நோட்டீஸ்!
என்எல்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களைவையில் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
என்எல்சி விவகாரம்
கடலூர், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கோ. ஆதனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் 2000 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய அனைத்து நிலங்களுக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திடீரென என்எல்சி 30 ராட்சச மண் வெட்டும் இயந்திரத்தை வைத்து அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய விளைநிலத்தில் பயிர்களை அழித்து பரவனாறு வெட்டும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக நோட்டீஸ்
இந்நிலையில் என்எல்சி விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு முற்றிலும் எதிராக இந்த விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டிய அதிமுக எம்பி. சிவி சண்முகம் .
இந்த விவகாரத்தை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவையில் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளித்துள்ளார்.