எந்த நேரத்திலும் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம்: நிதிஷ்குமார் சூசகம்
பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்று நிதிஷ்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி நூலிழையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.
பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரே முதல்வராக பதவியேற்றார். ஆனால் எத்தனைக் காலம் அவர் முதல்வராகத் தொடர்வார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
பீகார் முன்னாள் முதலமைச்சரும், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான கர்ப்பூரி தாக்கூரின் பிறந்தநாள் விழா, பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதிஷ்குமார், மக்களுக்காக உழைத்த கர்ப்பூரி தாக்கூர் பாதியிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டதைப் போல, தாமும் பதவிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க. ஆதரவுடன் முதலமைச்சராக உள்ள நிதீஷ்குமார், பா.ஜ.க அனைத்து தரப்பு மக்களுக்கான கட்சி இல்லை என்று மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனால் இனிவரும் நாட்களில் பீகார் அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது பரபரப்பாகியுள்ளது.