எனக்கு உங்கள் உதவி வேண்டும் : இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு ரணிலுக்கு நித்யானந்தா கடிதம்
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ,இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு அதிபர் ரணிலுக்கு கைலாசா நித்யானந்தா கடிதம் எழுதியுள்ளார்.
கைலாசா அதிபர் நித்தியானந்தா
பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா.

தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதனை கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
உடல்நிலையில் பின்னடைவு
கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது ,என்பதையும் அங்கு அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை. ஆனால் கிராப்பிக் செய்யப்பட்ட பின் திரைக்கு முன்னாக அமர்ந்துக்கொண்டு தனது சீடர்களுக்கு ஆன்லைன் மூலம் யூடியூப் நேரலை சொற்பொழிவை பேசிவந்தார். இப்படி கொரோனா காலகட்டத்தில் நித்தியானந்தா அவரது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தது இணையத்தில் வைரலானது.
தனக்கென தனி சாம்ராஜ்யத்தை கைலாசாவில் அமைத்து ஆட்சி நடத்தி வந்த நித்தி கடந்த 3 மாதங்களாக நித்தியானந்தா நேரலையில் தோன்றவில்லை. இதைத்தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது.
இலங்கை அதிபருக்கு கடிதம்
எனினும், அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் நித்தி முன்பு போல் தனது ஆன்மிக உரையினை நிகழ்த்தவில்லை ஆன்லைனில் பழைய கோப்பு காட்சிகளே ரீ எடிட் செய்யப்பட்டு வெளியான நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சாமியார் நித்யானந்தா இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங்கேவிற்கு கடிதம் எழுதினார்.
அதில் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது சிகிச்சைக்கான மொத்த செலவினையும் சொர்க்க பூமியான கைலாசா ஏற்றுக் கொள்ளும் என்றும் நித்யானந்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.