மூச்சுவிட சிரமப்படும் நித்யானந்தா... 6 மாதமாக சாப்பிடாமல் இருந்ததால் வந்த வினை... சோகத்தில் சீடர்கள்
தன்னை நன்றாக மூச்சுவிட சொல்லி டாக்டர்கள் வலியுறுத்தும் நிலையில் தனது உடல் நிலை ஒத்துழைக்க மறுப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமான நித்தியானந்தா கைலாசா என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அதில் உள்நாட்டு பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சுகாதாரத் துறை, கல்வித் துறை என பல்வேறு அரசு துறைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக அங்கிருந்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இதனிடையே அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தான் 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிப்பதாகவும், மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை என்றும் நித்தி தெரிவித்திருந்தார். உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது உடல்நிலை குறித்து பக்தர்களுக்கு நித்தியானந்தா பேஸ்புக்கில் புதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 6 மாதங்களாக உணவு உட்கொள்ளாததால் வலு குறைந்துள்ளதாகவும், எல்லா மருத்துவ ரிப்போர்ட்களும் நன்றாக இருந்தாலும் உணவை வாயில் போட்டவுடன் வாந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
6 மாதமாக தூங்காததால் நான் பத்மாசனத்தில் அமர்ந்தால் எல்லா நாடிகளும் சுவாசமும் அடங்கியிருக்கும். ஆனால் என் மனம் இந்த உலகை மறந்துவிட்டது. என்னால் ஆழ்ந்து மூச்சுவிட முடியவில்லை. மருத்துவர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சு விடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் நித்யானந்தா கூறியுள்ளார்.
கைலாசாவில் மிகப் பெரிய மருத்துவமனை எல்லாம் இல்லை என்பதால் மிகப் பெரிய மருத்துவ கட்டமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்
என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்காக பக்தர்கள் யாரும் பணம் அனுப்ப வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.