நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்... கடிதம் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா
சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் பிரபலமான நித்தி கைலாசா என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார்.
அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக அங்கிருந்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இதனிடையே அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை.
மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக்கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.