கைலாசா மீது தீவிரவாத தாக்குதலுக்கு சதி- நித்யானந்தா குற்றச்சாட்டு
கைலாசா நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பியதோடு மட்டுமல்லாமல், கைலாச என்ற நாட்டை உருவாக்கி அங்கு அதிபராக பதவி வகித்து வருவதாக தெரிவித்திருந்தார். கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ள நிலையில், அவ்வப்போது அங்கிருந்து வெளிவரும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறுவது வழக்கம்.
இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்யானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் தங்கள் நாட்டின் மீது பயோ வார் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் கேட்காமலேயே சிலர் மர்ம விதைகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.