மக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் வருமா? இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இன்று தாக்கலாகிறது பட்ஜெட்
இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இது அவர் தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் இதுவாகும். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. இதனால் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக அரசின் கடைசி பட்ஜெட்
மேலும், இந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது.
2024 மக்களவை தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்யும் இறுதியான முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.