பிரச்சாரத்தின்போது பெண்ணுக்கு தலையில் பூ சூட்டிய நிர்மலா சீதாராமன்
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது பெண் ஒருவருக்கு, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மல்லிகைப் பூவை சூட்டினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு ஒருநாள் பயணமாக வந்துள்ளார். காலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், காரைக்கால் செல்வதாக இருந்தது.
ஆனால், அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அவரை வரவேற்பதற்காக தொண்டர்கள் மேளதாளங்கள் இசைத்தனர். ஆரவாரம் செய்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் கவுரவித்தனர்.

நெல்லித்தோப்பு பெரியார் நகர் கஸ்தூரி பாய் வீதியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர், மத்திய அமைச்சர் தலையில் பூ வைத்துக் கொள்ள மல்லிகைப் பூவை கொடுத்தார். அதை மகிழ்வுடன் வாங்கிக் கொண்ட நிர்மலா சீதாராமன் நடந்து அடுத்த வீட்டுக்குச் சென்றார்.
அப்போது அங்கிருந்த பெண்ணின் தலையில் பூ இல்லாமல் இருந்ததைப் பார்த்து அவரை அழைத்து அப்பெண் தலையில் மல்லிகைப் பூவைச் சூட்டினார். அதைப் பார்த்த அங்கிருந்தோர் கை தட்டினார்கள். அப்பகுதியில் விழாக்கோலமாய் காட்சி அளித்தது.