மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் நிதி இல்லை என்று மத்திய நிதியமைத்தார் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும், தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார்.
போட்டியிடாதது ஏன்?
அப்போது பேசிய அவர் "பாஜக தலைவர் ஜேபி நட்டா எனக்கு ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார். 10 நாட்கள் யோசனைக்குப் பிறகு வாய்ப்பை நிராகரித்தேன். ஏனென்றால், தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணம் இல்லை.
ஆந்திராவா தமிழ்நாடா என்ற குழப்பம், அதையும் கடந்தால், நீங்கள் இந்த சாதியா, இந்த மதமா எனத் தொடரும் கேள்விகள். இப்படியெல்லாம் என்னால் ஒரு வட்டத்துக்குள் இருக்க முடியாது. அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்தேன். தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.