இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் அதிகரித்துள்ளது - நிர்மலா சீதாராமன் தகவல்
நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில், மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு
இந்நிலையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் அமளி
இந்நிலையில், நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற மேலவையில் பணவீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வு பற்றி அவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டார்கள். அவர்கள் அனைவரையும் அமரும்படி அவை தலைவர் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் அதிகரித்துள்ளது
ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2017-2018 - ரூ.7,40,650 கோடியாகும், 2018 - 2019 - ரூ. 11, 77,368 கோடியாகும், 2019-2020 - ரூ.12,22,116 கோடியாகும், 2020-2021 ரூ.11,36,805 கோடியாகவும், 2021-2022 - ரூ.14,83,291 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.