வெல்லம், அப்பளம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான விலை உயர்வு - ஜி.எஸ்.டி. கவுன்சில் விளக்கம்
தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர்ந்து இதேநிலை நீடித்து வருவதால் இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் மாபெரும் போராட்டத்தை கையிலெடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது.
சமீபத்தில், மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
வரி உயர்த்தப்பட உள்ள 143 பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் தற்போது 18% ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் உள்ளன. அவற்றை 28% ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு பிரிவுக்கு மாற்றுவதால் அவற்றின் விலை கணிசமாக அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இத்தகவல் வெளியானதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், இத்தகவலை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.