இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் - முதலிடத்தில் சென்னை IIT, அண்ணா பல்கலைக்கழகம்
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
NIRF பட்டியல்
மத்திய கல்வி அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கற்பித்தல் கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு உட்பட பல்வேறு அளவுகளை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
சென்னை ஐஐடி
இதில் இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றதோடு பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது சென்னை ஐஐடி (Madras IIT).
தொடர்ந்து 6 வது முறையாக சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு இரண்டாவது இடத்தையும், பம்பாய் ஐஐடி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
சிறந்த மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்கள் பிரிவில் இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது.
சிறந்த மருத்துவ படிப்பை வழங்குவதில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தில் உள்ளது. பல் மருத்துவ கல்லூரி பிரிவில் சென்னையில் உள்ள சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடத்திலும் உள்ளது. சிறந்த கட்டுமான கல்வி வழங்கும் பிரிவில் ரூர்க்கி ஐஐடி முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு கல்லூரிகள்
விவசாயம் மற்றும் அது சார்ந்த துறை கல்லூரிகளில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்திலும், சிறந்த கல்லூரி பிரிவில் டெல்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடத்திலும் உள்ளது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகளும் இடம் பிடித்துள்ளன. சிறந்த பல்கலைக்கழகங்கள் பிரிவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (கோவை) 8 வது இடத்தையும், வேலூர் வி.ஐ.டி 10 வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறந்த கல்லூரி பிரிவில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (கோவை) 7 வது இடத்தையும்
லயோலா கல்லூரி (சென்னை) 8 வது இடத்தையும் பிடித்துள்ளது. மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் பிரிவில் கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம் 8 வது இடத்தில் உள்ளது.