சுற்றுலா'னு சொன்னதும் நினைவில் நீலகிரிதான் - அதோட வளர்ச்சியும், வரலாறும் தெரியுமா?
நீலகிரி வரலாறு
நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால், 'நீலகிரி' என அழைக்கப்படுகிறது. 'நீலகிரி' என்ற பெயருக்கு நீல மலைகள் (நீலம் - நீலம் மற்றும் கிரி - மலை) என்று பொருள்படும். இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். நீலகிரி ஆனது கடல் மட்டத்திற்கு 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக நீலகிரி பகுதியை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ளமை நீலகிரிக்குப் பெருமை சேர்க்கிறது.
வரலாற்று காலந்தொட்டு இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாகும். இம்மாவட்டத்தில் காடுகளும், மலைகளும் மிகுதியாக காணப் படுகின்றன. அதனாலே இங்கு பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொய்சானர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான விவரமான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஹொய்சாள மன்னன் தன்னாயகா 'நீலகிரி கொண்டான்' என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாகத் தெரிகிறது.1789ல் நீலகிரி ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடனேயே, அது கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஆகஸ்ட் 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
ஜேம்ஸ் வில்கின்சன் ப்ரீக்ஸ் நீலகிரியின் நிர்வாகத்தை அதன் ஆணையராக ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி 1882 இல், நீலகிரி மாவட்டம் ஆக்கப்பட்டு, கமிஷனர் இடத்தில் கலெக்டர் நியமிக்கப்பட்டார். 1882 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, அப்போதைய ஆணையராக இருந்த ரிச்சர்ட் வெல்லஸ்லி பார்லோ நீலகிரியின் முதல் கலெக்டரானார்.
பழங்குடியினர்
நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. இங்கு பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடிகள்: இருளர், குறும்பர், பனியர், தோதவர், படகர், கோதவர், நாயக்கர் என்ற ஏழு பெரும் பிரிவுகள் ஆகும். இவர்களில் பழமையான இனத்தவர் தோதவர் ஆவர்.
இப்பழங்குடிகளில் இருளரே கடுமையான உழைப்பாளிகள். வேளாண்மையிலும் ஈடுபடுகின்றனர். குறும்பர் பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7,62,141. இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம்.
இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரத்திற்குப் பின்னும் முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தொழில் மற்றும் வேளாண்மை
நீலகிரியில் முக்கிய தொழிலாக இருப்பது தேயிலை உற்பத்தி. கூடலூர் பகுதியில் குறுமிளகு, ஏலக்காய், இஞ்சி மற்றும் காப்பித் தோட்டங்களும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் 750க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் பரவி உள்ளன.
இங்குள்ள தேயிலை தொழில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது மற்றும் இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. தேயிலை 45,974 ஹெக்டேருக்கு மேல் பயிரிடப்படுகிறது மற்றும் உற்பத்தி சுமார் 60,000 டன்கள் ஆகும். 2019 – 20 ஆண்டு கணக்கின்படி 73406.00 ஹெக்டர் பரப்பளவில் 83,125 விவசாயிகள் வேளாண்மை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டக்கலை
நீலகிரி மாவட்டமானது ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். மேலும் இங்கு மலைகளின் உயரத்திற்கு ஏற்றவகையில் மலைப்பயிர்களும் விளைவிக்கப் படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்ப நிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது, முறையே காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ தாவரங்கள் மற்றும் மலைத்தோட்ட பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் (Terrace cultivation) மற்றும் சில கிராமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி, மற்றும் இதர வகைபயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மலையின் இடைப்பட்ட பகுதிகளில் கமலாஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
சுற்றுலா தலங்கள்
சுற்றுலா தலங்களுக்கு ஏற்ற மாவட்டமாக நீலகிரி உள்ளது. இங்குள்ள இதமான சுற்றுச் சூழலும், காலநிலையும் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. அந்த வகையில் 'முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம், சிம்ஸ் பூங்கா, லாஷ் நீர்வீழ்ச்சி, லாம்ஸ் பாறைமுனை,
காட்டேரி அருவி, டால்பின் நோஸ் காட்சி முனை, கொடநாடு காட்சி முனை, தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, அவலாஞ்சி, தொட்டபெட்டா, பைகாரா நீர்வீழ்ச்சி, தவளைமலை பார்வைமுனை, உதகை ஏரி படகு இல்லம், ஊசிமுனைப் பாறை, முதுமலை தேசியப் பூங்கா, ரோஸ் பூங்கா, பொட்டாணிக்கல் கார்டன், ஊட்டி படகு இல்லம், மலை ரயில் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
அணைகள் மற்றும் அருவிகள்
இம்மாவட்டத்தில் பைக்காரா அணை, குந்தா அணை, சாந்தி நல்லா நீர்த்தேக்கம், காமராஜ் சாகர், மரவக்கண்டி நீர்த்தேக்கம் ஆகிய அணைகள் உள்ளன. மேலும் கல்லட்டி நீர் வீழ்ச்சி, காட்டேரி அருவி, லாஸ் அருவி, கேத்தரின் அருவி, மாயார் அருவி, சின்னக் குன்னூர், கூக்கல்துறை அருவி, பைகாரா நீர்வீழ்ச்சி ஆகிய அருவிகளும் உள்ளன.