கொரோனா அதிகமான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு– பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திக்கொள்ளலாம் என்று மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் 2ம் அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது - கொரோனாவின் முதல் அலையின் தாக்கத்தைக் காட்டிலும் இரண்டாம் அலையின் தாக்கம் நம் நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது.
கொரோனா பாதிப்பு அதிகம் பரவும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம். இந்திய நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும் தாண்டி வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஷ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆதலால் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசுகள் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தீவிரப்படுத்திக் கொள்ளலாம். கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தலாம். மக்கள் மத்தியில் கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வைத் தீவிரப்படுத்த வேண்டும்.
நாட்டில் 70% ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி செலுத்துவது இன்றியமையாதது. தடுப்பூசி தேவைப்படும் மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தி நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்துவதனை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.