கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் ரத்து - முதலமைச்சர் பசவராஜ் அறிவிப்பு
கர்நாடகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மராட்டியத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
எனவே மேலும் தொற்று பரவாமல் இருப்பதை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை குறைய தொடங்கியுள்ளது.
இந்த அலையின்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
இதற்கிடையே தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் பசவராஜ் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் இரவுநேர ஊரடங்கு வரும் 31-ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.