சென்னையில் நாளை நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல தடை ; 1.25 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில்,
நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை சென்னையில் அத்தியாவசிய வாகனங்களை தவிர பிற வாகனங்கள் செல்ல மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 1.25 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு நாளை இரவு 12 மணிக்கு பிறக்கிறது. இதனால் 2021ம் ஆண்டு விடைக்கொடுத்து 2022ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 2022-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் இந்த ஆண்டும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் கோயில்கள், தேவாலயங்களில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், மெரினா, பெசன்ட் நகர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தடை விதித்துள்ளது.
வழக்கமாக நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், ரிசாட்டுகள், கிளப்புகள், மனமகிழ் மன்றம் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதிதுள்ளது.
நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள், ரிசாட்டுகள், பண்ணை வீடுகள் என அனைத்தும் நாளை இரவு 11 மணிக்கு மேல் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாளை இரவு பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருடன் இணைந்து சட்டம் ஒழுங்கு போலீசாரும் பொதுமக்கள் யாரும் கூடாத வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு அன்று 1.25 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
விதிக்கப்பட்டுள்ள தடையை மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடற்கரை பகுதிகளில் உள்ள சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுகுறித்து மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு அதிகாலை 5 மணி வரை அனுமதி இல்லை.
எனவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.