தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து,ஞாயிறு முழு ஊரடங்கும் ரத்து என தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.