பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகி ஒருவரை பிடித்து பழநியில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
5 ஆண்டுகள் தடை
கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கிய பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் இருந்தன.
பல்வேறு கலவரங்கள் உள்பட பயங்கரவாத செயல்களுக்கு இந்த அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையிி்ல, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அமலாக்க துறை அதிகாரிகள் 2022 செப்.22-ல் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா 100 கோடிக்கு மேல் டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் கணக்கில் அடங்காத பணம் கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரன்ட் அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளின் வீடுகளில் கடந்தாண்டு செப்.27-ல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனடிப்படையில், பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் செப்.28-ல் உத்தரவிட்டது.
NIA அதிகாரிகள் விசாரணை
தடையை நீக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியாவின் அரசியல் அமைப்பான சோஷியல் டெமாரக்டிக் பார்ட்டி ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃ பிரன்ட் நிர்வாகிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து பழநி வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேர், மதுரை மாவட்ட தலைவர் முஹமது கைசர் என்பவரை பிடித்தனர். அவரை பழநி டவுன் போலீஸில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.