இந்தியா vs நியூசிலாந்து - 2ம் நாள் போட்டி! கூடுதல் நேரம் மோதல்? எத்தனை ஓவர்கள்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2-ம் நாளான இன்று என்ன நடக்கபோகுது என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி, இங்கிலாந்து சௌதாம்ப்டானில் ஜூன் 18ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அங்குத் தொடர் மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர், முதள் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டாலும் கூட போட்டியைத் திட்டமிட்டபடி 5 நாட்கள் வரை நடத்த முடியும். அதாவது, மீதமுள்ள நாட்களில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, முதல்நாளின் இழப்பை ஈடுசெய்ய முடியும். ஒருவேளை இது சாத்தியமாகவில்லை என்றால், ரிசர்வ் டே எனப்படும் 6ஆவது நாளிலும் போட்டியை நடத்திக்கொள்ளலாம்.

இதனால் இறுதிப் போட்டி ஜூன் 19 முதல் 23ஆம் தேதிவரை நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில், இரண்டாவது ஆட்ட நாள் ஆட்டத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதில், 2-ம் நாள் ஆட்டம் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே துவங்கப்படும். மொத்தம் 98 ஓவர்கள் வரை வீச முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதனால் போட்டி, திட்டமிட்டபடி 3:30 மணிக்குத் துவங்காமல் 2:30 மணிக்கு ஆரம்பமாகும். ஷெசனுக்கான இடைவெளியில் மாற்றம் இருக்காது. மழை குறுக்கிடும் பட்சத்தில் கடைசி செஷன் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.