நம்ம ஊர்ல நம்மள அடிக்க எவனாலயும் முடியாது - பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உறுதி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரை இந்திய அணியே வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரை சென்ற நியூசிலாந்து அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தையும் தவறவிட்டது.
டி.20 உலகக்கோப்பை தொடரை முடித்த அடுத்த தினமே இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ரோஹித் சர்மா இந்திய டி.20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டியிலும், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு வில்லனாக இருந்த நியூசிலாந்து அணியை, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்த தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டி.20 தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், டி.20 தொடரை இந்திய அணியே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என நம்புகிறேன். இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்க வேண்டும். இஷான் கிஷன் திறமையான வீரர்.
அடுத்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இஷான் கிஷன் இருப்பார் என நம்புகிறேன். மூன்றாவது இடத்தில் களமிறங்க அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், முடிந்த அளவிற்கு இஷான் கிஷனிற்கு இந்திய அணி அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார்.