இறுதி நிமிடம் வரை பரபரப்பு; கடைசி பந்தில் நியூசிலாந்து அணியை வதம் செய்த வங்கதேசம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியிலும் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசால்டாக அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி 20 போட்டி வங்கதேசத்தின் தாக்காவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான நயீம் 39 ரன்களும், லிட்டன் தாஸ் 33 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஹீம் ரன் எதுவும் எடுக்காமலும், நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 12 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அணியின் கேப்டனான மஹ்மதுல்லாஹ் கடைசி நேரத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 141 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டாம் பிலண்டல் 6 ரன்னிலும், ரவீந்திரா 10 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய கிராந்தோம், வில் யங் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மறுமுனையில் இறுதி வரை ஆட்டமிழக்காத டாம் லதாமின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
சீனியர் வீரரான டாம் லதாம் களத்தில் இருந்ததாலும், கடைசி ஓவரை வீசிய முஸ்தபிசுர் கடைசி ஓவரில் ஒரு நோ பால் வீசியதாலும், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது, ஆனால் கடைசி ஒரு பந்திற்கு 6 ரன்களை தேவை என்ற நிலையில், நியூசிலாந்து அணி அந்த பந்தில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்ததால் வங்கதேச அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி முன்னிலையில் உள்ளது.