16 ஆண்டுகளின் சாதனை...ஒரே போட்டியில் நிகழ்ந்த மூன்று ரெக்கார்ட் ...அசத்திய நியூசிலாந்து!!
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலகக்கோப்பை முதல் போட்டி
இந்தியாவில் நேற்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் துவங்கியது. முதல் போட்டியில் கடந்த முறை கோப்பையை வென்ற இங்கிலாந்து மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 282 ரன்களை 9 விக்கெட்டுகள் இழந்து எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்களை சேர்த்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் ரன் எடுக்காமலே வெளியேறிய நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு கைகோர்த்த டெவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
3 சாதனைகளுடன் துவங்கிய நியூசிலாந்து
2வது விக்கெட்டுக்கு 270 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இவர்கள் 36.2 ஓவரிலேயே நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்தனர். டெவன் கான்வே 121 பந்துகளில் 152 ரன்களையும், ரச்சின் ரவீந்தரா 96 பந்துகளில் 123 ரன்களையும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதில் டெவன் கான்வே 84 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக் கோப்பையில் அதிவேகமாக சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஆனால் அடுத்த 15 நிமிடத்தில் 1 பந்து குறைவாக 83 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அந்த சாதனையை ரச்சின் ரவீந்திரா தன்வசமாக்கினார். அத்துடன் நியூசிலாந்தின் நாதன் அஸ்லேவின் சாதனையை தகர்த்த ரச்சின் ரவீந்திரா உலககோப்பை வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே மிகவும் இளம் வயதில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்து உலக அளவில் 3வது இடத்தில் நீடிக்கின்றார். மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்த போட்டியில் அதிக ரன்கள் (273) பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையை கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் படைத்துள்ளனர்.
ஒரே போட்டியில் அடுத்தடுத்து 3 சாதனைகளை படைத்து உலகக்கோப்பை தொடருக்கு அசத்தலான துவக்கத்தை இந்த ஜோடி அளித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் முதல் சதத்தை பதிவு செய்ய அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2011-இல் விரேந்திர சேவாக் முதல் சதத்தை பதிவு செய்ய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2015-இல் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் முதல் சதம் அடிக்க சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா தட்டி சென்ற நிலையில், 2019 ஆம் ஆண்டில் ஜோ ரூட் முதல் சதம் அடிக்க இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்து முதல் சதம் அடித்திருப்பதால் உலக கோப்பையை அந்த அணி முதல்முறையாக கைப்பற்றுமா?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.