உக்ரைனை வென்றது ரஷ்யா? - கட்டுரை வெளியிட்டு நீக்கிய ரஷ்ய செய்தி நிறுவனம்
உக்ரைனை வென்றுவிட்டதாகவும், ரஷ்ய அதிபர் புதினை பாராட்டியும் ரஷிய செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 7வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஆயுதம், நிதி உதவிகளை வழங்கி வருவதால் சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைனை வென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டதாவும், ராணுவ நடவடிக்கை மூலமாக உக்ரைன் ரஷ்யாவிடம் மீண்டும் வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நொவஸ்டி என்ற செய்தி நிறுவனத்தில் இந்த கட்டுரை கடந்த 26 ஆம் தேதி வெளியாகியுள்ளது.சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த கட்டுரை குறித்து சமூகவலைதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இணையதள பக்கத்தில் இருந்து செய்தி நிறுவனம் அதனை நீக்கியுள்ளது