12 நாடுகளில் குரங்கு அம்மை....கவலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி சென்றது. இன்றளவும் உருமாறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நோய் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின்,ஸ்வீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு அம்மைக்கு அறிகுறிகளாக இருக்கும் நிலையில். பாதிக்கப்பட்டவர்கள் கொப்புளங்களைத் தொடுதல், பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதன் மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுகிறது.
இதனிடையே மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலும் குரங்கு அம்மை பரவி வருவது கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் போன்றோருக்கு இந்த நோய் தாக்குதல் தீவிரமாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.