வாங்காளதேசத்தை புரட்டி எடுத்த நியூசிலாந்து அணி மிரட்டல் வெற்றியால் ரசிகர்கள் உற்சாகம்

New Zealand Test Match Wining 2nd
By Thahir Jan 11, 2022 07:07 AM GMT
Report

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்காளதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கேப்டன் டாம் லாதமின் 252 ரன்கள் உதவியுடன், 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசஅணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் முன்னனி பேட்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் அந்த அணி 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பாலோ ஆன் ஆன நிலையில், வங்காளதேச அணி இன்று, தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை விளையாடியது.

இரண்டாம் இன்னிங்சிலும் வங்காளதேசத்தின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் ஒருவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஒருபுறம் லிட்டன் தாஸ் போராட, மறுபுறமோ விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன.

லிட்டன் தாஸ் மட்டும் 102 ரன்கள் குவித்து அணிக்கு சிறிது ஆறுதல் அளித்தார். இறுதியில் அந்த அணி 79.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருதை 252 ரன்கள் குவித்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமும், தொடர் நாயகன் விருதை கான்வேயும் பெற்றுக்கொண்டனர்.