நியூசிலாந்தை பழித்தீர்க்க புது வியூகங்களுடன் தயாரான இந்திய அணி
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி இன்று தொடங்குகிறது. ஜெய்ப்பூரில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
மனதளவில் காயம் அடைந்த ரசிகர்களுக்கு மருந்தாக இந்த தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணியிலும் முக்கிய வீரர்கள் சிலர் இல்லையேன்றாலும், வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்கள் திறமையை நிரூபிக்க தயாராக உள்ளனர்.
டி-20 போட்டிகளை பொறுத்தவரை இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. சர்வதேச டி-20 போட்டிகளில் இரு அணிகளும் 18 முறை மோதியுள்ளன.
இதில் இந்தியா 8 முறையும், நியூசிலாந்து 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய இருத் தரப்பு டி-20 தொடரில் இந்திய அணி 5க்கு0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
ஆனால் டி-20 உலகக் கோப்பையில் வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியா தோல்வியை தழுவியது.
டி-20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகிய நிலையில் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ரோகித் சர்மா.
இதே போன்று பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளதால் இருவரின் கூட்டணியும் எப்படி செயல்படும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இன்று போட்டியில் எந்த வீரரை தேர்வு செய்வது? யாரை விடுவது? என்பதே இந்திய அணி நிர்வாகத்திற்கு தலைவலியாக இருக்கும். உத்தேசமாக 1.ரோகித் சர்மா, 2.கே.எல்.ராகுல், 3.ரித்துராஜ் கெக்வாட்/இஷான் கிஷண் , 4.ஸ்ரேயாஸ் ஐயர், 5.சூர்யகுமார் யாதவ், 6.ரிஷப் பண்ட் 7,வெங்கடேஷ் ஐயர்/அக்சர் பட்டேல், 8. அஸ்வின்/சாஹல் 9. தீபக் சாஹர். 10, ஆவேஷ் கான்/ ஹர்சல் பட்டேல் 11, முகமது சிராஜ் ஆகியோர் போட்டியில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், பெளல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை இழந்ததால் ஏற்பட்ட வடு மறைவதற்குள் அடுத்த போர்க்களத்திற்கு நியூசிலாந்து தயாராகிவிட்டது.
டேரல் மிட்செல், குப்தில், ஜிம்மி நேஷம் ஆகியோர் இந்திய அணிக்கு நெருக்கடியை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.