"கொரோனா உருமாறும்போது நாமும் மாற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது" - நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்
கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளே திண்டாடிக் கொண்டிருந்த நிலையில் உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்து கொரோனா இல்லாத நாடாக மாறியது.
அதற்கு காரணம் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த துரித நடவடிக்கைகள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனுக்குடன் கட்டுப்பாடு, விரைவான கொரோனா பரிசோதனை முடிவுகள்,
பாதிக்கப்பட்ட நபர்களோடு தொடர்பில் இருந்தவர்களை டிராக் செய்து தனிமைப்படுத்தியது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
கொரோனா சங்கிலித் தொடரை நியூஸிலாந்து அரசு அறுத்து எறிந்தது. இதனால் கடந்தாண்டு பிப்ரவரியிலிருந்து ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
ஆனால் ஆகஸ்ட் மாதம் மீண்டும் கொரோனா தலைகாட்டியது. உடனே நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்தார்.
மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் தான் கொரோனாவை விரைவாக விரட்ட முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக மக்களிடம் கூறினார்.
அவரின் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது அபாயகரமான டெல்டா தான். டெல்டா தான் இந்தியாவை 2-ம் அலையில் உலுக்கி எடுத்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"இந்தக் காலகட்டத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் முன்பை விட வித்தியாசமானது. அதிவேகமாக தாக்கக் கூடியது. இது நிச்சயம் கடினமாக தான் இருக்கப் போகிறது.
ஆனால் கொரோனா உருமாறும்போது நாமும் மாற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் இம்முறை ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் தாக்கினாலும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் என்னிடம் இல்லை.
இருப்பினும் கட்டுப்பாடுகள் இருக்கும். தொழில் துறைகள் வழக்கம் போல திறக்க அனுமதி வழங்கப்படும். உள்ளூர் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துசெல்ல வேண்டும். இதனை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.