கருச்சிதைவு ஏற்பட்டால்... முதல் ஆளாக சட்டம் இயற்றிய நாடு
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு துரதிஷ்டவசமாக கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என நியூசிலாந்து முதல் நாடாக சட்டம் இயற்றியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே குழந்தை பெற்றுக்கொள்ள தாய்மார்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது, சில நாடுகளில் தந்தைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருவுற்ற சில வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என நியூசிலாந்து சட்டம் இயற்றியுள்ளது.
இதுதொடர்பான மசோதா கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டமாக இயற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய தொழிலாளர் எம்பி ஜின்னி ஆண்டர்சன், நாம் உலகில் முதலாவது நபராக இருக்கும்போது, கடைசி நபராக இருக்கமாட்டோம் என்பதை என்னால் உறுதியாக நம்ப முடியும்.
நம்நாட்டை பார்த்து மற்ற நாடுகளும் அதன் வேதனையை அறிந்து சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிக்கும் சட்டத்தை தொடங்குவார்கள் என தெரிவித்தார்.