இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எல்லாம் இப்படிதான் - நியூசிலாந்து பெண் அமைச்சர் சர்ச்சை கருத்து
நியூசிலாந்து பெண் அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் இந்தியர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களின் மின்னஞ்சல்கள் ஸ்பேம்
நியூசிலாந்து அமைச்சரவையில் குடியேற்றத் துறை (Immigration) அமைச்சராக இருப்பவர், எரிகா ஸ்டான்ஃபோர்ட்(47).
கடந்த மே 6 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றத்தின்போது இந்தியர்கள் பற்றிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தும் குடியேற்றப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை கேட்கும் மின்னஞ்சல்கள்.
ஆனால் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை. நான் அதைத் திறந்து பார்ப்பதில்லை. அவை Spam போன்றது” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு கண்டனம்
அவரது கருத்துக்கு இந்தியர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூசிலாந்தின் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா ராதாகிருஷ்ணன், "அமைச்சர் ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களைத் தனிமைப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்தியர்கள் குறித்து நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளதாக எரிகா ஸ்டான்ஃபோர்ட் விளக்கமளித்துள்ளார்.