பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்த நியூசிலாந்து - கடுப்பான அக்தர்
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை திடீரென நியூசிலாந்து ரத்து செய்ததற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 ஆண்டுகளுக்கு பின்பு பாகிஸ்தானில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவிருந்தது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி முழு சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்தது. நியூசிலாந்து நாட்டு அரசின் பாதுகாப்பு ஆலோசனை குழு மூலம் பாகிஸ்தானில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற சூழலில் எங்கள் வீரர்களின் உயிர் முக்கியமானதாக கருதி இந்தச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்வதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவிட் ஒயிட் தெரிவித்தார்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகளுடனான போட்டிகளை பாகிஸ்தான் பாதுகாப்பாகவே நடத்தியுள்ளது.இன்றைய அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று என்பதால் அதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும் எனவும் அக்தர் தெரிவித்துள்ளார்.