புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கடந்த 6 மாதங்களாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 15 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனிடையே கொரோனா வைரஸின் உருமாறிய தோற்றமான ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மற்ற மாநிலங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நேற்று உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழகக் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து கல்லூரிகளிலும் செயல்படுத்தப்பட்டு வந்த தொழில்நுட்பக் கல்லூரிகளின் சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் வழக்கமான நடைமுறை படி செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.