புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் போலீசார் கிடுக்கு பிடி - மெரினாவில் இருந்து மக்கள் வெளியேற்றம்
2022ஆம் ஆண்டு இன்னும் 3 மணி நேரத்தில் விடைபெற உள்ள நிலையில் பிறக்க உள்ள புதிய ஆண்டான 2023 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
மக்கள் கூடுவதற்கு தடை
இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த நிலையில், இந்தியாவில் இன்னும் 3 மணி நேரத்தில் பிறக்க உள்ளது.
இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
இதையடுத்து காமராஜர் சாலை மற்றும் அதை இணைக்க கூடிய சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகளில் போலீசார்
இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் மெரினாவிற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் வாகனங்களில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
மேலும் சென்னையில் 17,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.