டெஸ்ட் சாம்பியன்சிப் புதிய புள்ளி பட்டியல் வெளியீடு - உச்சத்தை தொட்ட இந்திய அணி: உற்சாகத்தில் ரசிகர்கள்
இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பிறகான புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் குவித்தது.
விராட் கோலி 50 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாகூர் 57 ரன்களும் எடுத்து கொடுத்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஓலி போப் 81 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 127 ரன்களும்,புஜாரா 61 ரன்களும், ரிஷப் பண்ட் 50 ரன்களும், முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் 60 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்த இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 368 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடித்து சற்று கடின இலக்கு தான் என்றாலும் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் அசால்டாக இந்திய அணி வீழ்த்திவிடலாம் அல்லது போட்டியை டிராவாவது செய்து விடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ரோரி பர்ன்ஸ் 50 ரன்களும், ஹசீப் ஹமீத் 63 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
இங்கிலாந்து அணிக்கு துவக்கம் மிக சிறப்பாக அமைந்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜோ ரூட்டை (36) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து தடுப்பாட்டம் கூட ஆட முடியாமல் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 210 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, 157 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தநிலையில், இந்த போட்டிக்கு பிறகான புதிய புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி 54.17 வெற்றி விகிதத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தலா 50% வெற்றி விகிதத்துடன் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளன. 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள இங்கிலாந்து அணி 29.17% வெற்றி விகிதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது.