2025 IPL; புதிதாக அமலுக்கு வரும் விதிகள் - இரண்டாவது பந்து விதி என்றால் என்ன?
2025 ஐபிஎல் தொடரில் புதிதாக சில விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் தொடர்
18வது ஐபிஎல் தொடர் வரும் நாளை(22.03.2025) தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
எச்சில் தடவ அனுமதி
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக சில விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேய்ந்த பந்துக்களை reverse swing செய்வதற்காக, பந்து வீச்சாளர்கள் பந்தில் எச்சிலை தடவி, அதை பளபளப்பாக மாற்றுவார்கள்.
கொரோனா காலகட்டத்தில் பந்தில் எச்சிலை பயன்படுத்த ஐசிசி தடை விதித்திருந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் தடை நீக்கப்பட்டுள்ளது.
கேப்டன்களுக்கு தடை இல்லை
குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காத நிலையில், அணியின் கேப்டன் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும்.
கடந்த ஐபிஎல் தொடரில், மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காததால், இந்த விதி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு, முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனி அதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காமல் இருந்தால், முதல் முறை போட்டி கட்டணத்தில் இருந்து 25-75 சதவீதம் அபராதமும், 2-வது முறை அபராதம் மற்றும் கேப்டனுக்கு 4 தகுதி இழப்பு புள்ளிகளும், 3வது முறை போட்டியின் முழு கட்டணமும் அபராதமாக விதிக்கப்படும்.
2வது பந்து விதி
அதே போல், புதிதாக 2வது பந்து(second ball rule) என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் நடைபெறும் போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் போது, மைதானத்தில் பனியின் தாக்கம் இருந்தால், பந்து வீச்சாளர்கள் பந்தை பிடிப்பது கடினமாக இருக்கும்.
இந்த சூழல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், 2வது பந்து விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போட்டியின் 2வது இன்னிங்ஸில் 11வது ஓவர்களுக்கு மேல், மைதானத்தில் உள்ள பனியின் தாக்கத்தை பொறுத்து, புதிய பந்தை பயன்படுத்த நடுவர் அனுமதிப்பார்.
இந்த 2வது பந்து விதிமுறை, பிற்பகல் நேரத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு கிடையாது. காரணம் அப்பொழுது பனியின் தாக்கம் இருக்காது.
ஹாக்-ஐ தொழில்நுட்பம்
அதே போல், ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியேயும், பேட்ஸ்மேனின் தலைக்கு மேலேயும் வீசப்படும் வைடுகளை மதிப்பிடுவதற்கு, ஹாக்-ஐ தொழில்நுட்பத்தைப் (Hawk-Eye technology) பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீரரின் உயரமும் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும். ஹாக்-ஐ அமைப்பு, பந்து வீசப்படும்போது பேட்ஸ்மேனின் தலைக்கு மேலே செல்லும் பந்துகள் வைடா? இல்லையா? என்பதை துல்லியமாக கணித்து அறிவிக்கும்.
தலைக்கு மேலே செல்லும் பந்துகள் வைடா? இல்லையா? என அறிவிப்பதில் நடுவர்களுக்கு குழப்பம் உள்ள நிலையில், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.