கொரோனாவினால் குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் புதிய ஆபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்!
கொரோனா தொற்று நோய் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். ஆனால், தற்போது அமெரிக்காவில் கொரோனாவினால் இன்னொரு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமானவர்களுக்கு நெஞ்சுவலி, இருதயப் பிரச்னைகள், ரத்தக் கட்டு, மற்றும் ஸ்ட்ரோக் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் ஆய்வில் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்காவில் 30 நிபுணர்கள் அடங்கிய பல்துறை வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்த முடிவுகள் Nature Medicine என்ற ஆய்விதழில் வெளிவந்திருக்கிறது. அதாவது நரம்பியல், இருதயவியல், கிட்னி மற்றும் வயதானோருக்கான நோயியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய பலதரப்பட்ட குழு ஆய்வு நடத்தியது.
கொலம்பிய பல்கலைக்கழகத்தின் இருதய துறையின் விவரங்களின்படி கொரோனாவிலிருந்து குணமடைந்த இருவாரங்களில் 20% பேருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவந்த இன்னொரு ஆபத்து என்னவெனில் முன்பு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் கொரோனா குணமடைந்த பிறகு சர்க்கரை நோய் வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சிறிய எண்ணிக்கையாக இருப்பினும் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சிலருக்கு ஸ்ட்ரோக், நுரையீரல் ரத்தக்கட்டு, மற்றும் சில சிக்கல்கள் உருவாகியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், கொரோனா இருக்கும் போது இதே அறிகுறிகள் சிலருக்கு இருந்தாலும் கொரோனா குணமடைந்து இரு மாதங்களுக்குப் பிறகும் கூட இருதயத் துடிப்பு அதிகரிப்பு, நடுக்கம், நீண்ட களைப்பு ஏற்படுவதை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், வெறும் கோவிட்19 என்பது மட்டுமல்லாமல் பலதுறை நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்றும், கோவிட் 19 நோய்க்கென்றே பிரத்யேக மருத்துவமனைகளை உருவாக்கி அவர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.