முகக்கவசம் இருந்தால் மட்டுமே மதுபானம்: டாஸ்மாக்கிற்கு புதிய கட்டுப்பாடுகள்
முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 10-ம் தேதி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பகுதி நேர ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தற்போது டாஸ்மாக் கடைகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கண்டிகப்பாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.