இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் - அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு..!
இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவை உருவாக்கப்படும் என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது.
இதையடுத்து அரசுக்கு எதிராகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக கோரி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த அன்றே அவரது ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்க முயன்றதால் பெரும் கலவரம் வெடித்தது.
இதையடுத்த மகிந்த ராஜபக்ச வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் திரிகோண மலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் இதற்கிடையே புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவர் என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையும் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமைதி காக்க இலங்கை மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.