அப்போ பஞ்சாயத்து.. இப்போ கடவுள் ! - திடீர் சாமியார் அன்னப்பூரணிக்கு போலிஸ் வைத்த செக்
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அம்மா என்று சொன்னால், "அன்னபூரணி அரசு அம்மா தான் நினைவுக்கு வருகிறார்".
இணைய தளம் முழுவதும் அன்னபூரணி அரசு அம்மா தான் இப்போது ட்ரெண்டிங். தன்னை "அன்னபூரணி அரசு அம்மனாக" மாற்றிக்கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே யூடியூபில் அருள் உரை நிகழ்த்தி வரும் அன்னபூரணி அரசு அம்மன் புத்தாண்டில் புது பொலிவுடன் அறிமுகமாக திட்டமிட்டிருந்தார்.
இதற்காக வருகின்ற புதுப் புத்தாண்டன்று "அம்மாவின் திவ்ய தரிசனம்" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவும் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலந்தாங்கள் பகுதியில் இந்த மாதம் 19ஆம் தேதி அன்னபூரணி அரசு அம்மாவின் திவ்ய தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடத்தியதாக, அன்னபூரணி அம்மா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரோகித் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புத்தாண்டில் புதுப்பொலிவுடன் அடுத்த நிகழ்ச்சிக்கு, அதுவும் செங்கல்பட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதற்கு நாங்கள் அனுமதி மறுத்துள்ளோம்.
ஒரு குறிப்பிட்ட நபர் தன்னுடைய தொலைபேசி எண் கொடுத்து திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். அவருக்கு தற்பொழுது தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம் .
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறையினரிடமும் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் தடை விதித்து இருப்பதால் அன்னபூரணி அரசு அம்மா தனது பக்தர்களுக்கு காட்சி கொடுக்க முடியா சூழலில் சிக்கி உள்ளார்.
வீடியோ வைரல் ஆனது தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தொலைபேசி தொடர்பு எண்களையும் நீக்கி உள்ளனர்.
ஈரோடு காவல்துறையினரும் அன்னபூரணி அரசு அம்மாவைத் தேடி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது அன்னபூரணி அம்மா தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.