புதிய நாடாளுமன்றம்..புகுந்த மழைநீர்; வாலி வைத்து பிடித்த அவலம் - மக்களவை செயலகம் விளக்கம்!
புதிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மழைநீர் கசிவு குறித்து மக்களவை செயலகம் விளக்கமளித்துள்ளது.
புதிய நாடாளுமன்றம்
மக்களவை, மாநிலங்களவைக் கூட்டங்களுக்காக, அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதற்கு கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கட்டடம், சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு முக்கோண வடிவில் கட்டப்பட்டது.
இந்தக் கட்டடத்துக்கு ’சென்ட்ரல் விஸ்டா' எனச் சிறப்பு பெயரும் சூட்டப்பட்டது. முதலில் இதற்கு ரூ.971 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது பின்னர் ரூ.1,000 கோடி வரை சென்றதாகக் கூறப்படுகிறது.கட்டமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு 2023ம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.
இந்த புது நாடாளுமன்றக் கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் எனவும், பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வலுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது, டெல்லியில் பெய்துவரும் கனமழைக்கே அக்கட்டடம் ஒழுகும் வீடியோ வெளியாகியுள்ளது அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், மேற்கூரையில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் பசை விலகியதால், இந்த கசிவு ஏற்பட்டதாக லோக்சபா செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
செயலகம் விளக்கம்
இது குறித்து லோக்சபா செயலர் கூறியதாவது: புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து ஒழுகுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளன. புதிய பார்லி., கட்டடத்தை, பசுமை வளாகமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்காக கண்ணாடியாலான மேற்கூரைகள் அமைக்கப்பட்டன.
இந்த கூரைகளில் ஒன்று, லாபி பகுதியிலும் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்படுவதால், இயற்கையான சூரிய வெளிச்சம் அந்த பகுதி முழுவதும் கிடைக்கும். ஆனால் கனமழை காரணமாக புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் லாபி பகுதியில் மேற்கூரையில் அமைக்கப்பட்ட கண்ணாடியை,
மேற்கூரையோடு சேர்த்து ஒட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருளிலான பசை, சற்றே விலகிவிட்டது.
இதன் காரணமாக சிறிய அளவிலான தண்ணீர் கசிவு லாபி பகுதிக்குள் ஏற்பட்டது.
அது, உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு உரிய நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது. என்று தெரிவித்துள்ளார்.