கீழடியில் கிடைத்த அடுத்த பொக்கிஷம் - அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட தகவல்
கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வின் போது செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாக் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் தமிழர்களின் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தும் விதமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் தொடங்கி வைத்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த அகழாய்வுப் பணிகளில் இதுவரை மொத்தம் 18,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பானை ஓடுகள், பாசி மணிகள்,பச்சை நிற பாசிகள், தாயக்கட்டை, அணிகலன்கள், மண் பானைகள், உறை கிணறுகள், மதில் சுவர்கள், கல்தூண் போன்ற அமைப்புடைய கல், முதுமக்கள் தாழிகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் 2,600 வருடங்களுக்கு முந்தையது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த 8 ஆம் கட்ட அகழாய்வு பணிகளில் முதல்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தில் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த அகழாய்வில் கனசதுர வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்து வந்த நிலையில் முதல்முறையாக செவ்வக வடிவிலான பகடைக்காய் கிடைத்துள்ளது.
மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் தமிழ் நாடு தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளில் கனசதுர (Cubical)வடிவில் மட்டுமே பகடைக் காய்கள் கிடைத்தது pic.twitter.com/forz56NskS
— Thangam Thenarasu (@TThenarasu) February 17, 2022
இதுதொடர்பாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான (Rectangular), தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு. இதுகாறும் கீழடியில் கனசதுர (Cubical) வடிவில் மட்டுமே பகடைக்காய்கள் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது என பதிவிட்டுள்ளார்.
இந்த பகடை 4.5செ.மீ உயரம், 0.9.செ.மீட்டர் உயரம், 0.9.செ.மீட்டர் தடிமன் கொண்டது என தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.