உளவுத்துறையில் அனுபவம்.. ஊழலுக்கு எதிராக அதிரடி: யார் இந்த புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ?

MKStalin Tamilnadu Governor RNRavi
By Irumporai Sep 10, 2021 07:11 AM GMT
Report

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போன ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர்.

இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றியுள்ளார். கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

2012ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக கட்டுரைகளை எழுதி வந்தார். சில ஆண்டுகள் பிரதமர் அலுவலகத்தில் சில காலம் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 தேதி நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அப்போது நாகா குழுக்களுடனான அமைதி முயற்சியில் மத்திய அரசின் சார்பில் மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மத்திய அரசுக்கும், என்எஸ்சிஎன் அமைப்புக்கும் இடையே அமைதிக்கான வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டாலும், அந்த திட்டம் இறுதிவடிவம் பெறாத காரணத்தால் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த ரவி, பல்வேறு விஷயங்களில் என்எஸ்சிஎன் அமைப்புடன் கருத்து மோதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

உளவுத்துறையில் அனுபவம்.. ஊழலுக்கு எதிராக அதிரடி:  யார் இந்த  புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ? | New Governor Of Tamil Nadu Rnravi

அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு நாகலாந்த் முதல்வர் நெஃபியூ ரியோவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியது அந்த கடிதத்தில் நாகாலாந்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், ஆயுதக் குழுக்களின் ஆதிக்கத்தில் மாநில அரசு இருப்பதாகவும் எழுதியிருந்தார் ரவி.

மக்களிடம் வரிவசூல் செய்துவரும் கிளர்ச்சிக் குழுக்களைத் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், உப்பு முதல் கட்டுமானப் பொருட்கள் வரை, எல்லாப் பொருட்களுக்கும் சட்டவிரோதமாக வரி வசூல் செய்யப்படுவதாகவும் சில ஆயுதக் குழுக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதாலும், வன்முறைச் சம்பவங்களாலும் தினக்கூலிகள், சிறு வணிகர்கள், தொழிலதிபர்கள், கடைக்காரர்கள், உணவக உரிமையாளர்கள், அரசு ஊழியர்கள் எனச் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார் ரவி.

உளவுத்துறையில் அனுபவம்.. ஊழலுக்கு எதிராக அதிரடி:  யார் இந்த  புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ? | New Governor Of Tamil Nadu Rnravi

இதனையடுத்து ரவியை சந்தித்து முதல்வர் விளக்கம் அளித்திருந்தார் அது உண்மையல்ல என்றும் கூறியிருந்தார்.இதற்கு என்எஸ்சிஎன் - ஐஎம் எனப்படும் நாகாலிம் தேசிய சோஷலிச கவுன்சில்- ஐசக் முய்வா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

முறைப்படியே மக்களிடமிருந்து வரி வசூல் நடப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆளுநர் ரவி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த காரணத்தால் என்எஸ்சிஎன் (ஐஎம்) அமைப்பு கடும் கோபமடைந்தனர்,நாகா பிரச்சினையைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கையாள்வதில் ஆளுநர் மகிழ்ச்சியடைகிறார் என்றால், நீண்டகாலமாக இருந்துவரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர் பொருத்தமான நபரே கிடையாது என்று கூறியிருந்தது.

நாகாலாந்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, காஷ்மீர் மாநிலத்தைப் போன்ற நிலவரத்தை இங்கு ஏற்படுத்த ஆளுநர் முயல்வதாக நாகாலாந்து மாநில முன்னாள் அமைச்சர் வாத்ஸு மெரு கூறியிருந்தார். நாகாலாந்து கூட்டணி அரசில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது என்பதும், பிரதமர் மோடியின் அபிமானத்தைப் பெற்றவர் ஆளுநர் ரவி என்றாலும் அவர் காட்டிய அதிரடி நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

உளவுத்துறையில் அனுபவம்.. ஊழலுக்கு எதிராக அதிரடி:  யார் இந்த  புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ? | New Governor Of Tamil Nadu Rnravi

இந்த நிலையில் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் ஆர்.என்.ரவி புதிய வருகையினை இரண்டு வகையாக பார்க்கலாம் ஒன்று இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இலங்கையில் தொடர்ந்து சீனாவின் கை நீண்டு வருகிறது. அங்கு சீன தனி ஆட்சி அதிகாரம் கொண்ட பகுதிகளை நிர்வகித்து வருகிறது.

அதோடு கேரளா எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக மாவோயிஸ்டுகள் இருப்பு அதிகரிக்கிறது. இதெல்லாம் போக கேரளாவில் இருந்து சிலர் ஐஎஸ் படையில் சேர்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வரும் நிலையில்தான், புலனாய்வு அதிகாரியாக இருந்த ரவி தமிழகம் வந்துள்ளார். அதே சமயம் தமிழகத்தில் பாஜக இன்னும் வலுப்பெறவில்லை கர்நாடகா தவிர வேறு எங்கும் பாஜக ஆட்சி இல்லை. ஆகவே நாட்டின் பாதுகாப்பு ரீதியாகவும் கட்சி சார்ந்தும் முக்கியமான நபர் இங்கே இருக்க என்பதாலேயே ரவி தமிழ்நாடு அனுப்பி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

உளவுத்துறையில் அனுபவம்.. ஊழலுக்கு எதிராக அதிரடி:  யார் இந்த  புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி ? | New Governor Of Tamil Nadu Rnravi

காவல்துறை பின்புலம் கொண்ட ரவியை தமிழக ஆளுநராக நியமித்ததில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில் ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்துள்ளது. தமிழக அரசியல் நடவடிக்கையை சீர்குலைக்க, பாஜகவை வளர்த்தெடுக்க பகடைக்காயாக ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது

 தென்னிந்திய அரசியலில் கரை கண்ட ஆர்.என்.ரவி மிகவும் கண்டிப்பான நபர் என்பதால் தற்போது ஆட்சியமைத்துள்ள திமுக அரசுடன் உறவு எப்படி இருக்க போகிறது என்பது  போக போகத்தான் தெரியும்.