ட்விட்டர் சிஇஓ மாற்றமா? ... நிர்வாகத்தில் அதிரடி காட்டும் எலான் மஸ்க்
எலான் மஸ்க் முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ட்விட்டர் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் ட்விட்டருடன் ஒரு கடுமையான பனிப் போரை எதிர்கொண்டு வந்த எலான் மஸ்க் ஒரு வழியாக ட்விட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து அதனை தனக்கு சொந்தமாக்கி கொண்டார். சமீபத்தில் ட்விட்டர் வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் டிவிட்டரின் கணிசமான பங்குகளை வாங்கினார்.
அதன்பின் தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கு ஓனராகியுள்ளார். இந்த தொகையை முழுவதுமாக செலுத்தி ட்விட்டரை சொந்தமாக்கி கொண்ட பின் தனது யோசனைக்கும், எண்ணத்திற்கு இணையான நிர்வாக குழுவையும், உயர் அதிகாரியையும் நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் கூட்டம் ஒன்றில் பேசிய சிஇஓ பாரக் அகர்வால் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என கூறியுள்ளார்.
ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கடந்த மாதம் ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லரிடம் எலான் மஸ்க் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதனால் கண்டிப்பாக புதிய நிர்வாகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்dஉ அமெரிக்க நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் இளம் சிஇஓ என பெருமைக்குச் சொந்தக்காரரான பராக் அகர்வால் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கும் வரையில் தான் சிஇஓ-வாக இருப்பார் என கூறப்படுகிறது.
ஒருவேளை ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றிய 12 மாதங்களுக்குள் பராக் அகர்வால் தனது பணியில் இருந்து நீக்கப்பட்டால், தனது பணி நியமன ஆணையின் படி பராக் அகர்வால் சுமார் 42 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெறுவார். ஆனால் அதற்குள் பராக் அகர்வால் வேறு நிறுவனத்திற்கு மாற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.