பிறந்த குழந்தை எரித்துக் கொலை - குற்றவாளிகளை தேடும் காவல்துறை
வேலூர் அரசு மருத்துவமனை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல். வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியை ஒட்டிய திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக கழிவுநீர் கால்வாயில் ஒரு குழந்தை எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக வேலூர் தாலுகா காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல் துறையினர் எரிந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது. குழந்தையின் பாலினம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் விசாரணையில் இறப்புக்கான காரணம் யார்? என்ன என்பது குறித்து தெரிய வரும் என்கின்றனர் காவல்துறையினர்.