தெறிக்கவிட்ட நெதர்லாந்து வீராங்கனை - டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
சர்வதேச டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி நெதர்லாந்து வீராங்கனை உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் வீழ்த்துவதில் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் இடையே ஒரு போட்டா போட்டியே நடப்பது வழக்கம். ஹாட்ரிக் , இன்னிங்ஸின் மொத்த விக்கெட்டுகள் என வகை வகையாக சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.
ஆனால் டி20 போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்துவது கொஞ்சம் கடினமான செயல் தான். அதற்கு காரணம் பந்துவீச்சாளர்களுக்கு அதிகப்பட்சமாக 4 ஓவர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
டி20 ஆட்டத்தில் நேபாளத்தைச் சேர்ந்த அஞ்சலி சந்த் என்ற வீராங்கனை மாலத்தீவுகள் அணிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு ஒரு ரன்னும் கொடுக்காமல் ஆறு விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். இதற்கு போட்டியாக இந்திய வீரர் தீபக் சாஹர் 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஏழு ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் மகளிர் டி20 உலகக்கோப்பை ஐரோப்பிய தகுதிச்சுற்று போட்டிகளில் நெதர்லாந்து - பிரான்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய பிரான்ஸ் அணி 17.5 ஓவர்களில் 33 ரன்களுக்குச் சுருண்டது.
நெதர்லாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரெடெரிக் 3 ரன்கள் மட்டும் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதில் 6 பேர் ஸ்டம்ப்கள் சிதற விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி, 3.4 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.