நேபாள விமான விபத்து : பலியான 22 பயணிகளின் உடல்களும் மீட்பு!
நேபாளத்தில் 4 இந்தியர்கள் உள்பட 22 நபர்களுடன் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரின் உடல்களும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நேற்று முந்தினம் காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது.
மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.
பொக்காராவில் இருந்து புறப்பட்டு சென்ற 25 நிமிடத்தில் ஜோம்சமில் தரையிறங்கியிருக்க வேண்டிய விமானம் சுமார் 2 மணி நேரமாக தொடர்பில் இல்லாமல் மாயமானதால் விமானத்தை தேடும் பணியில் ஹெலிகாப்டர் அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும், விமானத்தை தொடர்புக்கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேபாளத்தின் மஸ்டங் பகுதியில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர்களும் பலியாகி விட்டனர். நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது.
அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.