நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு - சிக்கியுள்ள 57 தமிழர்கள்
57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர்.
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து லெண்டே ஆற்றில் விழுந்ததில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
வெள்ளத்தில் பாலங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுவதும், வீடுகள் மூழ்கடிக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்திற்கு சென்றுள்ள100க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
சிக்கிய 57 தமிழர்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் 3 பேருந்துகளில் பயணித்துள்ள நிலையில், ஒரு பேருந்தில் பயணித்த 20 பேர் வெள்ளத்தில் சிக்காமல் அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர்.
மீதமுள்ள 2 பேருந்துகளில் சென்ற 37 தமிழர்களின் நிலை குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.
வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை இந்தியா தூதரகம் மூலம் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும், 80690 09901, 080690 09900, 1800 309 3793 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
மேலும் மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்களுடன் 2 இந்திய ராணுவத்தின் விமானங்கள் நேபாளத்திற்கு செல்ல உள்ளது.